தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் துரை வைகோ

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் துரை வைகோ

Veeramani

மதிமுக தலைமை கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை வையாபுரி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தனது தந்தை வைகோவுடன் அறிவாலயம் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற பின்னர் பேசிய மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வையாபுரி, “கடந்த ஐந்து மாதகாலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 500 வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார், 10  ஆண்டுகள் தேக்க நிலையில் இருந்த தமிழகம் தற்போது வளரத் தொடங்கியுள்ளது” என தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், “ நன்றாக பணியாற்றுங்கள் என முதலமைச்சர் என்னை வாழ்த்தினார். வலதுசாரி சித்தாந்தத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நான் முன்னெடுப்பேன், தலைமை கழக செயலாளராக என்ன பணிகள் என்பதை பிறகு சொல்கிறேன். பெரியாரும், பெருமாளும் ஒன்று என நான் தெரிவித்தது, பெரியாரால் தான் நாம் இன்று அனைவரும் கோயில் உள்ளே செல்ல முடிகிறது. அதை மனதில் வைத்துதான் அப்படி சொன்னேன். அதே போல் நான் இறை நம்பிக்கை உடையவன் தான்” என தெரிவித்தார்.

அதன்பின்னர் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ ஜனநாயக முறைப்படி துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் கிடையாது. 106 பேர் வாக்களித்து அதில் 104 பேர் துரை வைகோ அவர்களை செயலாளராக வரவேண்டுமென தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து தான் இவர் செயலாளராக ஜனநாயக முறைப்படி பதவி ஏற்றார், என் மகன் என்பதற்காக நான் திணிக்கவில்லைஎன்று கூறினார். முன்னதாக துரை வைகோ கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.