துரைமுருகன் - ரஜினிகாந்த் pt
தமிழ்நாடு

”வயசான நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாம போகிறதா?” - ரஜினிக்கு துரைமுருகன் ThugLife பதில்!

மூத்த அமைச்சர்களை கையாள்வது எளிதல்ல, அவர்களை சமாளிப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என கூறிய ரஜினிகாந்த் கருத்துக்கு தனதுபாணியில் ஒரு ThugLife பதிலளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

Rishan Vengai

திமுக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிட்ட பலபேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கலைஞர் எனும் தாய்

விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினி காந்த், கலைஞர் எதிர்கொண்ட அரசியல் சவால்கள் குறித்து பெருமையாக பேசினார். உடன் அரசியல் பேசும்போது ஜாக்கிரதையாக பேசவேண்டும் என்றும் பேசினார்.

மூத்த அமைச்சர்களை சமாளிப்பது எளிதல்ல..

புத்தகத்தை பெற்றுக்கொண்ட பிறகு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “அறிவார்ந்தோரின் சபையில் பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கருணாநிதியை பாராட்டி பேசியிருக்கும் பின்னணியில் மேலிடத்தின் உத்தரவு இருக்கும். சமூகம் மற்றும் மக்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி பாடுபட்டவர். கலைஞர் கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்கேனும் வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள். கருணாநிதி பல சோதனைகள், விமர்சனங்களை கடந்து கட்சியை வளர்த்துள்ளார். 5 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலே சிலர் திண்டாடுகின்றனர்” என்று பேசினார்.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசிய அவர், ”முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கிடைத்திருக்கும் வெற்றி அவரது அரசியலை பறைசாற்றும். அரசியல் பேசினால் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும், மூத்த அமைச்சர்களை சமாளிப்பது எளிதான விசயமல்ல, அதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்” என்றும் பேசியிருந்தார்.

ரஜினி கருத்துக்கு தனது பாணியில் பதில்சொன்ன துரைமுருகன்!

மூத்த அமைச்சர் துரைமுருகனைக் கையாளுவது எளிதல்ல என்ற பொருளில் ரஜினிகாந்த் பேசியநிலையில், அதைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி துரைமுருகனிடம் கேட்கப்பட்டது.

அப்போது பதிலளித்த நீர்வளத்துறை
அமைச்சர் துரைமுருகன், “அதேமாதிரி தான் வயசாகிப்போன மூத்த நடிகர்களால் இளைஞர்களுக்கு எதும் வாய்ப்பில்லாமல் போகிறதா? எல்லோருக்கும் சொல்வது மிகவும் எளிதுதான்” என்று பதிலளித்துள்ளார்.