தமிழ்நாடு

தமிழகத்தின் பல இடங்களில் கொட்டிதீர்த்த மழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

JustinDurai
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னை மக்களின் மனதை மழை தொடர்ந்து குளிர்வித்து வருகிறது. பல இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் சிரமமடைந்தனர். கோயம்பேடு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அம்பத்தூர், பாடி, முகப்பேர், ஈக்காட்டுத்தாங்கல், ராயப்பேட்டை, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிள் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், ஆவடி, திருவேற்காடு, கரையான்சாவடி, குமணண்சாவடி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சேலம் அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம், அயோத்தியாபட்டினம், சீலநாயக்கன்பட்டி, மல்லூர், ஐந்து ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் குளிர்ச்சியான சூழல் நிலவியதை தொடர்ந்து சாரல் மழையாக பெய்யத் தொடங்கியது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மோகனூர், வேட்டாம்பாடி, முத்துகாபட்டி, சேந்தமங்கலம், முதலைபட்டி, பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
திருமணிமுத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆரியூர்பட்டி, மேலப்பட்டி, பில்லூர் உள்ளிட்ட சிற்றணைகள் நிரம்பின. அதனால் பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளத்திற்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தினமும் பிற்பகலில் பெய்யும் மழை காரணமாக மலைப்பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி அருவிகள் ஆர்பரிக்கின்றன. பழனிக்கு செல்லும் பாலாறு பொருந்தலாறு மற்றும் குதிரை ஆறு அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான மல்லகுண்டா, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், தெக்குபட்டு, வடக்குப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளான பெரிய பேட்டை, சென்னம்பேட்டை, மேட்டுப்பாளையம் அம்பூர் பேட்டை, உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
ராசிபுரம், சிராப்பள்ளி, புதுப்பாளையம், வடுகம், பட்டணம், பாச்சல், ஆண்டகலூர்கேட், வெண்ணந்தூர், தேங்கள்பாளையம் உள்ளிட்ட பகுதியில் 1 மணி நேரத்திற்கு காற்றுடன் கன மழை பெய்தது.