தமிழ்நாடு

தமிழகத்தை குளிர்வித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை

தமிழகத்தை குளிர்வித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை

JustinDurai

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இந்த மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் வேளையில் வெயிலுடன் சேர்ந்த சாரல் மழை வித்தியாசமான காலநிலையை ஏற்படுத்தியது. குளிர் பிரதேசங்களில் பனிப் பொழிவைப்போல் பால் நிறத்தில் சாரல் மழை பெய்தது புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் விடாமல் பெய்த மழையால் தினசரி சந்தை, இந்திரா மார்கெட், நேருஜி கலையரங்கம், மன்னராஜா திருக்கோவில் ஆகிய இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்லவே தடுமாற்றம் அடைந்தனர். இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாகி நின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், வள்ளவிளை உட்பட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கன மழையும் சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது. குழித்துறையில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாக பகல் பொழுதில் விட்டுவிட்டு தொடர் மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் தொடர் மழையால் முற்றிலும் வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுகிறது. இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. சிவகங்கை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது.