தமிழ்நாடு

எடப்பாடி அருகே மழைநீருடன் கலந்த சாயக்கழிவு...70 குடும்பங்களுக்கு என்னவாயிற்று?

webteam

சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எடப்பாடி அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் சாயக்கழிவு நீரும் சூழ்ந்ததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நதியின் முகத்துவார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீருடன் சேர்ந்து சாயக்கழிவு நீரும் சூழ்ந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலையிலிருந்து உருவாகும் சரபங்கா நதி, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி மற்றும் எடப்பாடி வழியாக பாய்ந்து, காவிரியில் சங்கமிக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் நீர்வழிப் பாதைகளில் பல்வேறு இடங்களில், முட்பூதர்களும், ஆகாயத்தாமரை செடிகளும் அதிக அளவில் மண்டி கிடப்பதால், வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆற்றில் பாய்ந்து வரும் நீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எடப்பாடி அருகே உள்ள க.புதூர் அரசு பள்ளி பின்புறம் மற்றும் அரசு நூல்நிலைய குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் மழைநீருடன், சாயக்கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பதால் அப்பகுதியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.

இதேபோல் சரபங்கா நதி அருகே உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள நைனாம்பட்டி பகுதியில் பல வீடுகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதியில் ஆய்வுசெய்து இங்கு தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் நகராட்சி அதிகாரிகளும் சரபங்கா ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.