ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவை சேர்ந்தவர்கள் வீகே.குருசாமி, ராஜபாண்டி. உறவினர்களான இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்துடன் சிறு வயதிலயே மதுரைக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் வீ.கே.குருசாமியும், ராஜபாண்டியனும் அரசியலுக்கு வரத் தொடங்கினர். இதனால் இருவருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தலின் போது சிறிய சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பு மோதலாக முற்றியது.
இந்நிலையில் ராஜாபாண்டிக்கு உதவியாக இருந்த அவரது அண்ணன் மகன் சின்ன முனீஸ் என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு வீ.கே.குருசாமி தரப்பு, அரசியல் ரீதியான கொலை மிரட்டல் விடுக்கச் சென்றது. அப்போது காயத்துடன் இருந்த முனீஸ், எனது உயிரை எடுத்துவிடுங்கள் இல்லையென்றால் உங்கள் அனைவரையும் வெட்டிக் கொலை செய்துவிடுவேன் என சினிமா பாணியில் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்து வீ.கே.குருசாமி தரப்பினர் சின்ன முனீஸை கொலை செய்துள்ளனர். இதில், பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமூர்த்தி, வழுக்கை முனீஸ், வீ.கே.குருசாமி, கணுக்கன் முனியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தான் இனிவரும் தொடர் கொலைக்கான ஆரம்பமாக அமைந்தது இதனை தொடர்ந்து 2006-ல் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக வீ.கே.குருசாமி தேர்வானார்.
இதனையடுத்து 2008 ஆம் ஆண்டு சின்ன முனீஸ் கொலை வழக்கில் தொடர்புடைய வழுக்கை முனீஸை, ராஜாபாண்டியின் உறவினரான சப்பாணி முருகன் கொலை செய்தார். இதைத் தொடர்ந்து குருசாமி தரப்பால், சின்ன முனீஸ்-ன் தம்பி வெள்ளை காளி என்பவர், சின்ன முனிஸை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய வீ.கே.குருசாமியின் உறவினர்களான மாரிமுத்து, ராமமூர்த்தி ஆகிய இருவரையும் இரட்டை கொலை செய்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளைக்காளி மற்றும் சகுனி கார்த்திக் (வெள்ளை காளி உறவினர்) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது முத்து இருளாண்டி என்பவருடன் நட்பு ஏற்படுகிறது. இதனையடுத்து மூவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சின்ன முனீஸ் கொலை வழக்கில் தொடர்புடைய வி.கே.குருசாமியின் தங்கை கணவரான பாம்பு பாண்டியை, காளி, சகுனி கார்த்தி மற்றும் முத்து இருளாண்டி ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்த நிலையில், மூவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வீ.கே.குருசாமி தரப்பு சகுனி கார்த்தியின் தாய் மாமனான மயில் முருகன் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்தனர். இதில், வீ.கே.குருசாமியின் மகன் மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வீ.கே.மணியின் நண்பர் குப்பு என்ற முனியசாமியை வெள்ளை காளி மற்றும் ராஜபாண்டியின் மகன் தொப்பிலி முனியசாமி ஆகியோர் படுகொலை செய்தனர். இதில். காளி, தொப்பிலி முனியசாமி உள்ளிட்டோர கைது செய்யப்பட்டு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனையடுத்து பகையின் தொடர்ச்சியாக கடந்த 2016 ஆம் ஆண்டு காளி தரப்பினர் கமுதி அருகே வி.கே.குருசாமியின் மகளின் கணவரான எம்.எஸ்.பாண்டியன் என்பவரின் தம்பி காட்டுராஜா என்பவரை கொலை செய்து விட்டு காவல் துறையினரிடம் சரணடைந்தனர்.
இதனையடுத்து 2017ஆம் ஆண்டு வி.கே.குருசாமியின் மகன் மணி, ராஜபாண்டியனின் மகன் தொப்பிலி முனுசாமி என்பவரை கமுதிக்கு கடத்திச் சென்று பைக்குடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில், சாம்பல் கூட மிஞ்சவில்லை. இந்த கொலை வழக்கில் வி.கே.ஜி.மணி, கணுக்கன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2017-ல் வெள்ளை காளி, சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர் வி.கே.குருசாமியின் ஆதரவாளரான சடையாண்டி என்பவரை வெட்டிக் கொலை செய்தனர்.
இதனை தொடர்ந்து வெள்ளை காளியின் கூட்டாளிகளான சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி ஆகியோர் பொதுமக்களை மிரட்டி, கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினருக்கு ஆடியோ மூலமாக மிரட்டல் விடுத்த நிலையில், மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் மாயக்கண்ணன் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது இருவரையும் காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர்.
இந்த என்கவுண்டருக்கு வி.கே.குருசாமி தான் காரணம் எனக் கூறி வெள்ளை காளி தரப்பினர் மீண்டும் பகையை அதிகரிக்கத் தொடங்கினர். இதற்கு பழிவாங்கும் நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை கீழ் பகுதி ரேசன் கடையில் வைத்து குருசாமியின் மருமகன் எம்எஸ்.பாண்டியன் என நினைத்து ரேசன் கடை பணியில் இருந்த எம்.எஸ்.பாண்டியன் உறவினரான முனியசாமியை கொலை செய்தனர். இந்த வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வீ.கே.குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டியை, வெள்ளை காளி தரப்பினர் கொலை செய்தனர். இதில், வெள்ளை காளி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளை காளி தரப்பான குல்லா என்ற முத்து பாண்டியை கடந்த 2020 ஜூலை மாதம் குருசாமி தரப்பினர் கொலை செய்தனர். இதில் மாடு மணி என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஜூலை 28-ல் வெள்ளை காளியின் பிறந்த நாள் பரிசு எனக் கூறி வி.கே.குருசாமியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காளியின் நண்பர்களான அகோரி கார்த்தி, டோரி மாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நவம்பர் 15ஆம் தேதி வீ.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த மணி என்பவரின் நண்பரான முருகானந்தம் என்பவரை நடுரோட்டில் வைத்து காளி தரப்பினர் கொலை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வி.கே.குருசாமி சட்ட விரோதமாக கள்ளத் துப்பாக்கி எடுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடயே கடந்த 2019 ஆம் ஆண்டு மணி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மணி கைது செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளை காளி மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் சிறையில் இருந்தபடியே குருசாமியை கொலை செய்ய முயன்றபோது காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு விமானம் மூலமாக பெங்களூரு சென்ற வீ.கே.குருசாமி கர்நாடக மாநிலம் பெங்களூர் பனசாவடி பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் குருசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் குருசாமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாநகர் கீரைத்துறை, காமராஜர்புரம், வில்லாபுரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பல்வேறு பகுதிகளிலும் இரவு நேரங்களில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள கர்நாடக மாநில காவல் துறையினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக மதுரை நோக்கி விரைந்துள்ளனர்.
மதுரை முன்னாள் திமுக மண்டல தலைவர் மீது பழிக்கு பழி வாங்கும் விதமாக கர்நாடகாவில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தல் மோதல் பகையின் தொடக்கப் புள்ளியாக இருந்த ராஜாபாண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இவர், அதிமுகவின் மண்டல தலைவராக 2011ஆம் ஆண்டில் இருந்து பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த இரு தரப்பினருமே கூலிப்படை வைத்து கொலை சம்பவங்களில் ஈடுபடாமல் தங்களுடைய உறவினர்கள் மூலமே பழிக்குப் பழி வாங்கும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.