உயிரிழந்த தம்பதி pt desk
தமிழ்நாடு

நாகை: கடன் தொல்லை காரணமாக கணவன் எடுத்த விபரீத முடிவு - மனைவியும் உயிரிழந்த சோகம்

வேதாரண்யம் அருகே கடன் தொல்லை காரணமாக உயர் அழுந்த மின்கம்பியை பிடித்து கணவனும், மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: சி.பக்கிரிதாஸ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் மளிகைக் கடை வைத்திருந்த நிலையில், இவருடைய மனைவி புவனேஸ்வரி, தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மளிகைக் கடையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், இதனால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது.

Death

இந்நிலையில் கடன் பிரச்னையால் மனமுடைந்த குமரேசன், இன்று காலை தான் குடியிருந்த வீட்டின் மாடியில் அருகே சென்ற உயர் மின் அழுத்தக் கம்பியை பிடித்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அவருடைய மனைவி புவனேஸ்வரியும் உயர் அழுத்த மின்கம்பியை பிடித்ததில் அவரும் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியாப்பட்டினம் காவல் துறையினர் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவன் மனைவி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.