தமிழ்நாடு

துபாயிலிருந்து மதுரை திரும்பிய இளைஞருக்கு கொரோனா அறிகுறி

துபாயிலிருந்து மதுரை திரும்பிய இளைஞருக்கு கொரோனா அறிகுறி

webteam

துபாயில் இருந்து மதுரை வந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியாக சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தெர்மல் பரிசோதனை செய்யப்படுகிறது. மதுரையை பொறுத்தவரையில் சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து பயணிகள் நிலையத்திற்கு வருகை தருகின்றனர்.

அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த 20,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த திருமங்கலத்தை சேர்ந்த வயது 24 இளைஞருக்கு தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை மேற்கொண்டதில், காய்ச்சல் அதிகமாக இருந்ததுடன், கொரோனா அறிகுறி இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் உள்ள மருத்துவ குழுவினர் அவரை உரிய பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, டெல்லியில் இருந்து சென்னை வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.