Driver Raja PT Mail
தமிழ்நாடு

தேனி: குடிபோதையில் அரசு பேருந்தை இயக்கி, விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநர்!

PT WEB

ஆண்டிபட்டி அருகே மது போதையில் அரசு பேருந்தை இயக்கி அரசு பேருந்து ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவத்தின்படி, தேனியில் இருந்து நள்ளிரவில் திருநெல்வேலிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில் 55 பயணிகள் பயணம் செய்தனர்.

Driver Raja

பேருந்தை தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற அரசு பேருந்து ஓட்டுனர் இயக்கினார். தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டது முதல் ஓட்டுநர் பேருந்தை மிக வேகமாக ஓட்டியதாக தெரிகிறது.

தேனியை அடுத்துள்ள திருமலாபுரம் விளக்கு பகுதியில் பேருந்து வந்த போது, கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பேருந்து திடீரென சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் ஏறி மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்த இறங்கிய பயணிகள் வேகமாக ஓட்டிய ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் ஓட்டுநர் ராஜாவை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதனை செய்ததில் அவர் மது குடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.