மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் இசைக் கலைஞர் ஆனந்தன் சிவமணி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய அளவில் பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர்ப் பட்டியலை இந்திய அரசு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இரவு வெளியிட்டது.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் மோகன்லால், விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷன் விருதும், நான்கு பேருக்கு பத்ம விபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரதரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து இந்தியாவில் மொத்தம் 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், மேசை பந்து விளையாட்டு வீரர் சரத் கமல், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ்,
சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ஆர்.வி.ரமணி, இசைத்துறையை சேர்ந்த ஆனந்தன் சிவமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி ஆகிய தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரவு தேவா, டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் இசைக் கலைஞர் ஆனந்தன் சிவமணி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.