சென்னை அழைத்துவரப்பட்ட ஜாபர் சாதிக் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை அழைத்துவரப்பட்டார் ஜாபர் சாதிக்... 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை!

ரூ. 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் தொடர்புடைய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டம்.

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில், கடந்த மார்ச் 9-ம் தேதி போதைப்பொருள் கடத்தல் மன்னனும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குக்கு ஏழு நாட்கள் போலீஸ் கஸ்டடி கொடுத்து பட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

ஏழு நாட்கள் ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் அவரது சகோதரர்களான சலீம் மற்றும் மைதீன் ஆகியோருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், அவரது சகோதரர்களான சலீம் மற்றும் மைதீன் ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (கவன ஈர்ப்பு சுற்றறிக்கை) கொடுக்கப்பட்டது.

மேலும், ஜாபர் சாதிக் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே போதை பொருள் கடத்தியுள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை செய்ததில் ஜாபர் சாதிக் நியூசிலாந்து ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் போதைப்பொருள் கடத்தி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

கடத்தல் சம்பவத்தில் குடோன் அமைத்து போதை பொருட்கள் கடத்தி வந்த ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா (எ) சதானந்தத்தை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின் சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான சதானந்தம் பெயரில் இயங்கி வந்த குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஜாபர் சாதிக்

இந்தநிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஜாபர் சாதிக்கு சொந்தமான ஏழு மொபைல் போன்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே ஜாபர் சாதிக்-க்கு கொடுக்கப்பட்ட ஏழு நாள் போலீஸ் கஸ்டடி முடிவடைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மீண்டும் போலீஸ் கஸ்டடி கேட்டு அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கூடுதலாக மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி கொடுத்து பட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஏழு செல்போன்களில் உள்ள ஆவணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் மெயில் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு இவர் தொடர்பு கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மெயிலில் என்னென்ன தகவல்கள் அனுப்பி உள்ளார், போதை பொருள் குறித்து யார் யாருடன் மெயில் மூலமாக பேசியுள்ளார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களை கண்டறிவதற்காக ஜாபர் சாதிக்கை இன்று காலை 5 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர்.

பின் அங்கிருந்து சென்னையை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சென்னை மண்டலம் - போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கை வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜாபர் சாதிக்கை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 5 மணி நேரங்களுக்கும் மேலாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.