வறட்சி பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வறட்சி பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இவர்கள் விரைந்து அறிக்கை அளிக்க ஏதுவாக, அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் உடனடியாக அமைக்கப்படும் என்று கூறியுள்ள முதலமைச்சர், இந்த குழுக்கள் வருகிற 9-ஆம் தேதி வரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, வருகிற 10-ஆம் தேதி தங்களது அறிக்கையினை அரசுக்கு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், வறட்சி பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேவையான நிவாரணங்கள் அனைத்தையும் அரசு வழங்கும் என உறுதிபட தெரிவித்துக் கொள்வதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார்.
அரசு வழங்கும் நிவாரணத்தொகை தவிர, பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டு தொகையை பெற இயலும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளின் பாதிப்பு அளவை பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு தொகையை பெற இயலும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல், இதர பயிர் செய்த விவசாயிகளும் பயிர் காப்பீட்டுத் தொகையை பெற இயலும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்பதால் விவசாயிகள் யாரும் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.