தமிழ்நாடு

ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

webteam

டிரைவிங் லைசென்ஸ் மற்றும் எல்.எல்.ஆர்., பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால், சர்வர் கோளாறு ஏற்பட்டு, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில், செப்., 1 முதல், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவால், புதிதாக லைசென்ஸ் எடுப்பதற்கும், தொலைத்த லைசென்சை பெறுவதற்கும் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். பழகுனர் உரிமத்துக்கு விண்ணப்பிப்போர் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

இதற்கு, தற்போது, 'ஆன் - லைன்' மூலமே விண்ணப்பிக்க வேண்டும். அதில், விண்ணப்பக் கட்டணம் மட்டும், சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேரில் செலுத்த வேண்டும். இக்கட்டணம் செலுத்துவதற்கான சர்வர், சில தினங்களாக பழுதாகி, அவ்வப்போது மட்டுமே செயல்படுவதால், விண்ணப்பதாரர்கள் பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது "தினமும் சராசரியாக, 30 பேர் வரை ஓட்டுனர் பழகுனர் உரிமம் பெற விண்ணப்பிப்பர். ஆனால், ஒரு வாரமாக, தினமும், 80க்கும் மேற்பட்டோர் ஓட்டுனர் பழகுனர் உரிமம் பெற அலுவலகம் வருகின்றனர். ஒரிஜினல் லைசென்ஸ் தொலைத்தவர்கள் கூட, அவற்றை மறைத்துவிட்டு, மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கின்றனர். இதனால், கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகமான அளவில் ஆன் - லைனில் விண்ணப்பிப்பது உள்ளிட்ட காரணங்களால், சர்வர் சரியாக வேலை செய்வதில்லை. இதனால், பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது" என்றார்.