தமிழக கேரள எல்லையான குமுளியில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணி அளவில் அரசு பேருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஓட்டுநர் சென்ராயன் என்பவர் பேருந்தை இயக்கியுள்ளார். நடத்துநராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இவர்களுடன் மொத்தம் 68 பயணிகளும் பேருந்தில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே எஸ்.வளைவு என்ற பகுதியில் பேருந்து சென்ற போது எதிர்பாராத விதமாக பேருந்தின் பிரேக் செயலிழந்தது என கூறப்படுகிறது.
மலைப்பாதையின் இடப்பக்கம் 50 அடி பள்ளம் இருப்பதை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் சென்ராயன், சாலை ஓரத்தில் வலது பக்கம் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த ஒருவருக்கும் நடத்துநர் கிருஷ்ணமூர்த்திக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். அதேநேரம் இந்த விபத்தால் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து லோயர் கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.