திருவண்ணாமலை முகநூல்
தமிழ்நாடு

பேருந்தில் டிக்கெட் பாக்கி கொடுக்காத நடத்துநர்... இளைஞர் வைத்த ட்விஸ்ட்!

பேருந்தில் டிக்கெட் எடுக்க பணத்தை கொடுத்துவிட்டு, பாக்கி வரவில்லை என்றால் எப்படி இருக்கும்... இறங்கும் வரை நடத்துநர் பாக்கியை கொடுக்காததால் இளைஞர் செய்த காரியம் திருவண்ணாமலையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

PT WEB

பேருந்தில் டிக்கெட் எடுக்க பணத்தை கொடுத்துவிட்டு, பாக்கி வரவில்லை என்றால் எப்படி இருக்கும்... இறங்கும் வரை நடத்துநர் பாக்கியை கொடுக்காததால் இளைஞர் செய்த காரியம் திருவண்ணாமலையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வேலூரில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து திருவண்ணாமலை வழியாக சென்றது. அப்போது பேருந்தில் பயணித்த இளைஞர், டிக்கெட் எடுத்தபோது அவருக்கு நடத்துநர் பாக்கி பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வேங்கிக்கால் மின்வாரிய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இளைஞர், அங்கிருந்த தமது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, பேருந்தை பின்தொடர்ந்து சென்றார். தென்றல் நகர் அருகே பேருந்தை வழி மறித்து இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தினார்.

திடீரென பிரேக் பிடித்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்த, பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நடத்துநர் இறங்கிவந்து இளைஞரிடம் விசாரித்தபோது, டிக்கெட் எடுத்ததற்கு பாக்கி பணம் தரவில்லை என கூறி, பணத்தை பெற்றுக்கொண்டார். ஆத்திரமடைந்த ஓட்டுநர் அந்த இளைஞரை தாக்கியதில் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் சமரசம் செய்து இளைஞரை அனுப்பி வைத்தனர். இதனிடையே, இளைஞரை தாக்கியதாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.