தமிழ்நாடு

குடிநீருக்கே அல்லாடும் சாயல்குடி மக்கள்

குடிநீருக்கே அல்லாடும் சாயல்குடி மக்கள்

webteam

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே செவல்பட்டி மற்றும் சேதுராஜபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதிக்கென உருவாக்கப்பட்ட "நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்" முற்றிலும் முடக்கப்பட்ட நிலையில் கடந்த பல மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படுவதில்லையென இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், தனியாரிடம் குடிநீரை விலைக்கு வாங்க தயாராக இருந்தாலும் அதுவும் தங்களின் தேவைக்கு கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்பகுதி மக்கள் பனைக்காடுகளுக்குள் முன்னோர்கள் உருவாக்கி வைத்த மிகப்பழமையான பாழடைந்த கிணற்றில் குப்பை கூளங்களுடனும், செத்தை செடிகளுடனும் கிடைக்கும் உவர்ப்பு நீரை குடங்களில் எடுத்து துணிகளைக் கொண்டு வடிகட்டி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நீரைத்தான் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மற்றும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தங்கள் பகுதிக்கும் சுத்தமான மற்றும் சுகாதாரமான குடிநீரை விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும், இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழைபெய்யாமல் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் செய்ய இயலாமல், ஆடு மேய்த்து பிழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நல்ல குடிநீரும் கிடைக்காமல் பாழடைந்த கிணற்றில் கிடைக்கும் உவர்ப்பு நீரை பருகும் எங்களுக்கு நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

நாம் இப்பகுதி பொதுமக்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்  உம்மல் ஜாவியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, திருச்சியிலிருந்தே காவிரி நீர் குறைவாக வருவதாகவும், இதனால் பல கிராமங்களுக்கு குடிநீர் செல்லவில்லையெனவும், விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.