தமிழ்நாடு

குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள் ! பறிமுதல் செய்த அதிகாரிகள்

குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள் ! பறிமுதல் செய்த அதிகாரிகள்

webteam

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் முறைகேடாக குடிநீர் எடுக்க பயன்படுத்திய மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக விஜயமாநகரம், பள்ளிப்பட்டு, கர்ணத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளிலிருந்து ஆழ்துளை மோட்டார் அமைத்து குடிநீர் எடுத்து வந்து மங்கலம்பேட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து, அதிலிருந்து மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

பருவ மழை சரியாக பெய்யாததாலும், வருகின்ற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் குடிநீரை சேமிக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும், மங்கலம்பேட்டை பேரூராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை தடுப்பதற்காக வீடுகள் தோறும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில் மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் வீதிவீதியாக சென்று வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் மூலம் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப் படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சியின் எச்சரிக்கையை மீறி முறைகேடாக மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சிய 88 மின் மோட்டார்களை ஊழியர்கள் பறிமுதல் செய்து மங்கலம்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் கூறும்போது, "குடி நீரை உறிஞ்ச முறைகேடாக மின்மோட்டாரை பயன்படுத்தியதற்காக மின்மோட்டார் பறிமுதல் செய்து, ஒரு மின் மோட்டாருக்கு ரூபாய் 6 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி இனிமேல் மின் மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பை முழுவதுமாக துண்டிப்பதுடன், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.