காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் PT Desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை: 10 நாட்களுக்கும் மேலாக சாலையில் ஓடும் குடிநீர்... கோடையில் இப்படியொரு கொடுமையா?

கடந்த 10 நாட்களுக்கு மேலாக புதுக்கோட்டையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டிள்ள உடைப்பால், குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

PT WEB

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூரின் விராலிமலை - குடுமியான்மலை செல்லும் பிரதான சாலையோரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்

அந்தப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் சாலையோர பள்ளங்களில் குடிநீர் பெருகியோடி வரும் நிலையில், இதுகுறித்து புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளும், இந்த குழாய் உடைப்பை சரி செய்ய முறையான நடவடிக்கை எடுக்காததால் இப்போதுவரை இந்த அவலம் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக இதேபோல கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முதன்முதலில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டபோது, அதை சரி செய்வதற்காக பணியாளர்கள் பள்ளம் தோண்டியிருந்தனர். தற்போது அதுவும் பாதுகாப்பற்ற முறையில் அப்படியே கிடப்பதால், அவ்வழியே போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதற்கிடையே அடுத்தடுத்து ஏற்படும் உடைப்புகளால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்
கோடை காலத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மக்கள் தவிக்கும் சூழலில் திருவப்பூரில் 10 நாட்களுக்கு மேலாக இப்படி குடிநீர் வீணாக சாலையில் கலந்து வரும் காட்சிகள் காண்போருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அதனை அடைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளமும் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் அப்படியே கிடப்பது, சூழலை இன்னும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகமும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளும் குடிநீர் வெளியேறுவதை தடுப்பதோடு தோண்டப்பட்ட பள்ளத்தையும் மூடி வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.