சீர்காழி அருகே பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பப்பாளி இலைத் தண்டை பயன்படுத்தி இளநீர் விற்பனை செய்யப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்களிடையே இளநீருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் அருள்மிகு தையல் நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதுபோல வைத்தீஸ்வரன் கோயிலில் பார்க்கப்படும் நாடி ஜோதிடம் பிரபலமானது. கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடி ஜோதிடத்தை பார்த்து தங்களது மூன்று காலங்களையும் தெரிந்து கொண்டு அதற்கான பரிகாரங்களை செய்து செல்வது வழக்கம்.
இத்தகைய சிறப்புமிக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகம் தணிக்க 20-க்கும் மேற்பட்டோர் கோயிலைச் சுற்றி இளநீர் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் தடைசெய்யப் பட்டதால் பொதுமக்கள் இளநீரை அருந்துவதற்கு பிளாஸ்டிக் ஸ்ட்ரா கிடைக்கவில்லை. அப்படியே பருகினால் உடைகளில் இளநீர் சிந்திவிடும் என பெரும்பாலானோர் இளநீர் வாங்கிப் பருகுவதைத் தவிர்த்தனர். இதனால், இளநீர் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வியாபாரி சேகர் மற்றும் அவரது மகன் செந்தில் ஆகிய இருவரும் சோதனை முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் பப்பாளி இலை தண்டை ஸ்ட்ராவாக பயன்படுத்தி இளநீர் விற்பனை செய்துள்ளனர். இதற்கு பொதுமக்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் தொடர்ந்து பப்பாளி இலை தண்டை ஸ்ட்ராவாக பயன்படுத்தி இளநீர் வியாபாரம் செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் தயக்கமின்றி பப்பாளி தண்டோடு இளநீரை பருகிச் செல்கின்றனர்.
இவர்களின் முயற்சியை பேரூராட்சி செயல் அலுவலர் குகன் உள்ளிட்ட பலரும், இவர்கள் பயன்படுத்தும் பப்பாளி ஸ்ட்ராவை பார்த்து பாராட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது அங்கு அனைத்து இளநீர் வியாபாரிகளும் பப்பாளி இலை தண்டை ஸ்ட்ராவாக பயன்படுத்தி வருகின்றனர்.