தமிழ்நாடு

`மீண்டும் சேது சமுத்திர திட்டம் தேவை'-ராமர் பாலம் கருத்தை குறிப்பிட்டு கி.வீரமணி பேச்சு

`மீண்டும் சேது சமுத்திர திட்டம் தேவை'-ராமர் பாலம் கருத்தை குறிப்பிட்டு கி.வீரமணி பேச்சு

webteam

ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ள நிலையில், “மீண்டும் சேது சமுத்திர கால்வய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்காக திராவிட கழகம் போராட்டம் நடத்தும்” என திண்டுக்கல்லில் திராவிட கழக தலைவர் வீரமணி பேசியுள்ளார்.

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 49 வது நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு தி க தலைவர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "தந்தை பெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, ஜாதி வெறி, பதவிவெறி, போன்றவற்றையெல்லாம் தீர்க்கக் கூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தை விட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் பெரியாரைக் கண்டு இன்னும்கூட பயப்படுகிறார்கள். பெரியார் சிலையை கண்டு அஞ்ச கூடிய நிலையில் உள்ளனர். பெரியாரின் தத்துவத்தைக் கண்டு அவர்கள் மிரளுகிறார்கள்.

தென் மாவட்ட மக்களுக்கு பயன்படக்கூடிய மிகப்பெரிய திட்டம் சேது சமுத்திர கால்வாய் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் தென் மாவட்டங்களில் உள்ள வேலை இல்லாத ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். தென் தமிழகம் மிகப் பெரிய அளவிற்கு பயன் பெற்றிருக்கும்.

மதுரையில் மிகப்பெரிய அளவில் இதற்கான திட்ட துவக்கு விழா நடைபெற்றது. சுமார் 2000 கோடிக்கு மேல் செலவும் செய்யப்பட்டது. ஆனால் வேண்டுமென்றே ஒரு சில பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு கற்பனையாக `ராமர் பாலம் இருக்கிறது. அதனை இடிக்க கூடாது’ என கூறி அந்தத் திட்டத்தினை பாஜகவுடன் இணைந்து, நிறுத்தினார்கள். வேறு வழியில் சேது சமுத்திரத் திட்ட கால்வாய் செயல்படுத்தப்படும் என பாஜகவை மத்திய அமைச்சருக்கு நிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை அதையும் செயல்படுத்தப்படவில்லை. முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசுகையில் ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார்.

இக்கருத்து மூலம், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவும் - தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்பதற்காகவும்தான் இவ்வளவு பெரிய திட்டத்தை பாஜக அரசு புறக்கணித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. ஆகவே மத்திய அரசு உடனடியாக சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து இந்த திட்டத்தை முடிக்க வேண்டும். இதற்காக திராவிட கழகம் போராட்டம் நடத்தும்" என தெரிவித்தார்.