Congress ANI
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் 2024: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இழுபறி – காரணம் என்ன?

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, நெல்லை தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி ஏன்? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

webteam

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதுச்சேரியுடன் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரியில் வைத்திலிங்கம் மீண்டும் களம் காண்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திருவள்ளூர், விருதுநகர், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டனர்.

இருந்தபோதும் நெல்லை மற்றும் மயிலாடுதுறைக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களுக்குதான் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதால் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

election

மயிலாடுதுறையை பொறுத்த வரையில் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட முயற்சி செய்வது வருகிறார். ஆனால், ஏற்கனவே மணிசங்கர் ஐயர் முன்பு எம்.பி.யாக இருந்ததை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் நிர்வாகிகள், மண்ணின் மைந்தர்களுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர். மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர், மீரா ஹுசைன், ஹசீனா சைய்யது ஆகியோரது பெயர்களும் பேசப்படுகின்றன.

இதேபோல், நெல்லையில் புதியவர்களுக்கே வாய்ப்பு இருக்கும் எனவும், குறிப்பாக ராபர்ட் புரூஸ் மற்றும் பால்ராஜ் ஆகியோர் தேர்வு பட்டியலில் முன்னணியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.ராமசுப்பு ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. பால்ராஜ்க்கு வாய்ப்பளிக்க கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Selvaperunthagai

தமிழகத்தில் மீதமுள்ள இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.