இர்ஃபானின் சர்ச்சை வீடியோ மீதான நடவடிக்கை குறித்து மருத்துவர் ராஜமூர்த்தி விளக்கம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

இர்ஃபான் சர்ச்சை வீடியோ | “3 பேர் மீது நடவடிக்கை பாயும்” - மருத்துவர் ராஜமூர்த்தி பிரத்யேக பேட்டி!

இர்ஃபான் சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக, மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநராக மருத்துவர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

இர்ஃபான் சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக, மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், மருத்துவர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் டெலிவரியை தனது யூடியூப் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவதுபோல உள்ளது. அதுவும் மருத்துவரே, கத்திரிக்கோலை இர்ஃபானிடம் கொடுக்கிறார். இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், சர்ச்சையாக மாறியுள்ளது.

மேலும், அறுவை சிகிச்சை நடந்த இடத்தில், கேமராமேனுடன் சென்று இர்ஃபான் எப்படி அனுமதிக்கப்படலாம் என்ற கேள்வியும் எழுந்தது. தொடர்ந்து வீடியோவாக இதை வெளியிட்டதும் சர்ச்சையானது.

இந்தநிலையில், யூடியூபில் வெளியான வீடியோவை நீக்கக் கோரி மருத்துவத் துறை சார்பில் நேற்று இர்ஃபானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இர்ஃபான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இர்ஃபான் தனது சமூக வலைதளப்பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கினார்.

இந்தசூழலில், யூடியூபர் இர்ஃபான் மற்றும் அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோவன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க சென்னை செம்மஞ்சேரி காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக, மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் ராஜமூர்த்தி புதிய தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், “யூடியூபர் இர்ஃபான் மனைவியின் டெலிவரியில் தனது குழந்தையின் தொப்புள் கொடியை இவரே, வெட்டியது உள்ளிட்ட வீடியோவை தனது யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். இதனை ஒரு குழுவோடு சென்று வீடியோவாக எடுத்து லைவ்விலேயே போட்டிருக்கிறார்கள். இது தேவையில்லாத செயல். செய்யக்கூடாத ஒரு தவறான முன் உதாரணம்.

இது தொடர்பாக, மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம். முதலாவது இதில் சம்பந்தப்பட்டுள்ள மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவரிடம் நாங்கள் இது குறித்தான விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அதற்கு பதில் கொடுக்க வேண்டும். அதனை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கு நாங்கள் அனுப்பிவைப்போம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

அடுத்ததாக மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனைக்கு The Clinical Establishments act மூலம் அங்கீகார சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, மருத்துவமனையின் அங்கீகார சான்றிதழை ரத்து செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இவர்கள் தரக்கூடிய பதில்களை பொறுத்து நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.

அடுத்தபடியாக, இர்ஃபான் மேல் நாங்கள் நிச்சயமாக காவல்துறையிடத்தில் புகார் செய்ய இருக்கிறோம். அடுத்த முறை இதுப்போன்ற செயல்கள் செய்யாதபடி இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.