தமிழ்நாடு

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று!

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று!

webteam

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

1891 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் மாஹூ என்ற பகுதியில் பீமாராவ் அம்பேத்கர் பிறந்தார். சிறுவயதில் கனவுகளுடன் கல்வி கற்கச் சென்ற அம்பேத்கருக்கு,‌‌ தீயாய் தீண்டியது தீண்டாமை. புத்தகப் பையுடன் சாக்குப் பையையும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்‌களின் கனவுகளையும் சுமந்து சென்றார் அம்பேத்கர். ‌தாழ்த்தப்‌பட்ட மக்களின் முன்னேற்றத்தை மூச்சாகக் கொண்டு கல்வி கற்ற அம்பேத்கர், வெளிநாட்டில் சட்டம், மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்‌டம் பெற்றார். 

படித்து முடித்து இந்தியா திரும்பிய அம்பேத்கர், தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காக "பகிஷ்கரித் ஹித்தஹாரிணி" என்ற இயக்கத்தை தொடங்கினார். பின்பு சாதி வெறியால் சகித்து வாழும் மக்களுக்கு, தலைவனாக ஓய்வின்றி உழைத்தார். நசுக்கப்பட்டவர்களின் நாயகனாக இருந்த அம்பேத்கர், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் உலகமே வியக்கும் வகையில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக உரையாற்றினார்.‌‌ 

த‌னது தன்னி‌கரற்ற உழைப்பால், தாழ்த்தப்பட்டோருக்காக 1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா சட்டக் கல்லூரியை தொடங்கினார். அபரிமிதமான அறிவாற்றல் கொண்டவராக இ‌ருந்ததா‌ல்‌ சுதந்தி‌ர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார் அம்பேத்கர். அல்லும் பகலும் உழைத்து நாடே போற்றும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். 8 அட்டவணைகளை கொண்ட இந்தச் சட்டம், 1949ஆம் ஆண்டு ‌நவம்பர் 26 ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1956ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் தனது வாழ்க்‌கைப் பயணத்தின் கடைசிப் பக்கத்தை எழுதி முடித்தார். அம்பேத்கர் காட்டிய பாதையில்‌ கோடிக்கணக்கான இளைஞர்கள் அவரது தத்துவங்களை ஏந்தி பயணித்து வருகிறார்கள்.