ஈரோடு அருகே திருமணமாகி இருபதே நாளில் வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் மனு அளித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பட்டதாரி உமா மகேஸ்வரி. இவருக்கும் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுங்கத்துறையில் பணிபுரியும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த மே மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு வரதட்சணை வேண்டாம் என தெரிவித்த மணிகண்டனின் தாயார் மணி, திருமணத்திற்குப் பிறகு 40 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டனுக்கும், உமா மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணமாகி 20 நாளில் கணவர் மணிகண்டன் தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக உமா மகேஸ்வரி எஸ்பி அலுவலகம், மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், தம்பதியினருக்குள் நடக்கும் அந்தரங்க விஷயங்களை, கணவர் மணிகண்டன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து வருவதாகவும் இதனால் கணவர் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.