தமிழ்நாடு

சென்றாயன்பாளையம் சிறுமி பாலியல் வழக்கு - 5 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்

சென்றாயன்பாளையம் சிறுமி பாலியல் வழக்கு - 5 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்

webteam

சேலம் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் மற்றும் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே கடுங்காவல் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 2014 ஆம் ஆண்டு அதேபகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். 

தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கொடூர சம்பவத்தில்  தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்பினர் வலியுறுத்தினர். 

இதன் தொடர்ச்சியாக மாநில மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை நடத்தியது. விசாரணையில் வழக்கில் சம்பந்தப்பட்ட பூபதி, ஆனந்தபாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இவர்கள் மீது போக்சோ  உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில் சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. 

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் பூபதி, ஆனந்த்பாபு, ஆனந்தன், பிரபாகரன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியே கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், அபராத தொகையாக ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 5 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து. இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியான பூபதிக்கு இரட்டை ஆயுள் மற்றும் 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மற்ற நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் மற்றும் 39 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.