Door delivery pt desk
தமிழ்நாடு

சேலம்| வீட்டுக்கே டோர் டெலிவரியாகும் கள்ளச்சாராயம் - அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ! எஸ்.பி விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயத்தைக் குடித்த 35 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், சேலத்தில் பால் பாக்கெட் போல வீட்டுக்கே கள்ளச்சாராயம் டோர் டெலிவரி செய்யப்படும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆர்.ரவி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் மணி விழுந்தான் ஊராட்சிக்குட்பட்ட ராமசேசபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

Door delivery

அதனை உறுதிபடுத்தும் வகையில், தலைவாசல் மணிவிழுந்தான் பகுதியில் கள்ளச்சாராயத்தை இருசக்கர வாகனத்தில் பால்பாக்கெட் போல் பாக்கெட் செய்து, குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்துவருகின்றனர் சிலர். மதுகுடிப்போர் இருக்கும் இடத்திற்கே வந்து டோர் டெலிவரி செய்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பது வாடிக்கையாகி உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரம் குறித்து ஆத்தூர் டி.எஸ்.பி சதீஷ்குமாரிடம் கேட்டபோது... “கள்ளச்சாராயம் தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடியோ குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வந்த வீடியோ எனவும், அதன்பேரில் அப்போதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதன்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சேலம் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.