வாங்கும் மதுபானத்திற்கு ரசீது, மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை என கடையை சுற்றி விளம்பரம் செய்த மதுபானக் கடை மேலாளரின் செயலால் மதுகுடிப்போர் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மாதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதும் மதுகுடிப்போர் தட்டிக் கேட்டு விற்பனையாளர்களுடன் தகராறில் ஈடுபடுவதும் விற்பனையாளர்களோ சற்றும் சளைக்காமல் கறாராக கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதும் வாடிக்கையாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முட்டைக்காடு பகுதியில் இயங்கி வரும் 'டாஸ்மாக்' கடையில் பணியாற்றும் மேற்பார்வையாளர் கடையை சுற்றி வாடிக்கையாளர் வாங்குகின்ற மதுபானத்திற்கு ஏற்ப ரசீது, இந்த கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை, விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் தெரிவிக்க வேண்டிய மேற்பார்வையாளர் எண் என நேற்று கடையை சுற்றி எங்கு பார்த்தாலும் விளம்பர பதாகைகளை வைத்து விளம்பரம் செய்துள்ளார்.
இதையடுத்து இந்த செய்தி சமூக வலைதளங்கள் மூலம் காட்டு தீ போல மது குடிப்போர் மத்தியில் பரவிய நிலையில், இன்ப அதிர்ச்சியடைந்த குமராபுரம், முட்டைக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது குடிப்போர் அந்த கடைக்கு சென்று மது வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் இந்த கடை ஒரே நாளில் பிரபலமாகி மது குடிப்போரிடையே பேசு பொருளாகி உள்ளது.