தமிழ்நாடு

வங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் மோசடி! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

webteam

வங்கி கணக்குகளில் இருந்து நூதனமாக பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வங்கி கணக்கில் இருந்து இருப்புத்தொகையை மர்ம நபர்கள் திருடுவதாக தொடர் புகார்கள் வந்தன. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதன்படி நூதன கொள்ளையில் ஈடுபட்ட 8 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடன் தருவதாக கூறி பலரிடம் தொலைபேசியில் பேசி அவர்களின் வங்கி விவரங்களை சேகரித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடி நடப்பது எப்படி?

  • டெலிகாலர்ஸ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து சென்னையில் பல்வேறு இடங்களில் கால்சென்டர்ஸ் தொடங்குகிறார்கள்
  • பிறகு வாடிக்கையாளர்களுடன் போனில் பேசி கடன் தருவதாக ஆசையை தூண்டுகிறார்கள்
  • வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள், சம்பள தேதி உள்ளிட்டவைகளை அறிந்து கொள்கிறார்கள்
  • முக்கிய ஆவணங்களான பான் கார்டு, ஆதார் கார்டு, ஏடிஎம் தகவல்கள், வாக்காளர் அட்டை உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் 3 நாட்களில் கடன் கிடைத்துவிடும் என்று கூறி தகவல்களை பெறுகின்றனர்
  • பணத்தை திருடுவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பணம் உங்கள் கணக்கில் வரப்போவதாக கூறி வாடிக்கையாளர்களின் ஓடிபி எண்ணையும் கேட்கிறார்கள். பணத்தேவை இருப்பதால் வாடிக்கையாளர்களும் உடனடியாக ஓடிபி எண்ணையும் தெரிவிப்பார்கள்
  • அடுத்த விநாடியே வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் திருடுகிறார்கள்.
  • டெலி காலர்ஸ் பேசுவதற்காக பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளையும் வாடிக்கையாளர்களிடம் வாங்கிய ஆவணங்களை வைத்தே வாங்கியிருப்பது போலீசாரை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போலீசார், ''கடன் தருகிறோம், கிரெடிட் கார்டு தருகிறோம் என்று செல்போனுக்கு வரும் அழைப்புகளை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பிவிடக்கூடாது. வங்கி தொடர்பான அழைப்புகள் ஏதேனும் வந்தால் அதனை வங்கி கிளையுடன் ஆலோசித்து அதன் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும். வங்கி கடன்களை முடிந்தவரை நம்பகமான ஆட்களை வைத்தே வாங்க வேண்டும். குறிப்பாக போன் மூலம்  நமது வங்கி கணக்குகளை அறிமுகம் இல்லாத ஒருவர் கேட்கிறார் என்றாலே நாம் கவனமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்