தமிழ்நாடு

"இறந்து போன மாணவர்களின் உடலை வைத்து அரசியல் செய்வது வழக்கமாகிறது" - நீதிபதி கருத்து

"இறந்து போன மாணவர்களின் உடலை வைத்து அரசியல் செய்வது வழக்கமாகிறது" - நீதிபதி கருத்து

webteam

இறந்து போன மாணவரின் உடலை வைத்து அரசியல் செய்வது தற்போது வழக்கமாகி வருகிறது. அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செய்த மனு தாக்கலில்,  "நாங்கள் பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனது இரண்டாவது மகன் சீனி கடையநல்லூரில் உள்ள இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் உள்ள ஆசிரியர்களால் எனது மகன் பல இன்னல்களை அனுபவித்து வந்தான் நாங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சில ஆசிரியர்கள் எனது மகனை வேண்டுமென்றே ஜாதி ரீதியாக துன்புறுத்தியும் வந்தனர். எனது மகன் கல்வியில் மிகவும் ஆர்வமாக உள்ள மாணவன் ஆசிரியர்களின் ஜாதி ரீதியான நடவடிக்கை குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி சில ஆசிரியர்களால் எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். ஆனால் எனது வீட்டில் மகன் தற்கொலை செய்து கொண்டது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. எனது மகன் சாவில் மர்மம் உள்ளது. இந்த நிலையில் எனது மகன் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் எனது அனுமதி இன்றி எனது மகனின் பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர். பள்ளி நிர்வாகத்தை காப்பாற்று நோக்கில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, எனது மகனின் உடலை மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற் கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சக்தி குமார் சுகமார குருப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ”மாணவனின் உடல் மருத்துவர் குழு அமைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டதை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. உடலை வாங்க மறுப்பதால் தினந்தோறும் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, ‘சமீபகாலமாக பிணத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையாகிவிட்டது இதற்கு சிறந்த உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு. மாணவனின் மரணம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதால் உடலை நாளை காலை 10 மணிக்குள் பெற்றோர்கள் வாங்கி இறுதி மரியாதை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை கண்காணிப்பாளர் ஒன்றிணைந்து மாணவனின் உடலை தகனம் செய்யலாம்” என தெரிவித்தார். மேலும், வழக்கை தென் மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரியை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.