தமிழ்நாடு

புதுச்சேரியில் லாட்டரியா? - அனுமதிக்கக்கூடாது என ஆளுநரிடம் மனு அளித்த எம்எல்ஏ

புதுச்சேரியில் லாட்டரியா? - அனுமதிக்கக்கூடாது என ஆளுநரிடம் மனு அளித்த எம்எல்ஏ

webteam

புதுச்சேரியில் லாட்டரி முறை கொண்டுவரப்படுவதாக செய்திகள் பரவிய நிலையில், கேசினோ மற்றும் லாட்டரி கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் வழங்கினாலும் ஆளுநர் ஒப்புதல் வழங்கக்கூடாது எனக்கூறி, அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்தார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கேசினோ எனப்படும் சூதாட்டம் மற்றும் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சட்டத்துக்கு புறம்பாக விற்கப்பட்ட லாட்டரியால் நஷ்டத்தைச் சந்தித்த ஒருவர், தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு சயனைடு விஷம் கொடுத்துவிட்டு, மனைவியுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டார். அதற்குப்பின் லாட்டரி பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில் புதுச்சேரியில் லாட்டரி முறை அதிகாரப்பூர்வமாக கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் பரவின.

இது குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியில் கேசினோ மற்றும் லாட்டரி கொண்டுவருவது தான் மாநில வளர்ச்சியா? என கேள்வி எழுப்பினார். ஆளுநரின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, இதை கேட்க இவர் யார் என்றும் கிரண்பேடிக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்றும் ஆவேசப்பட்டார். மேலும், சுற்றுலாவை நம்பியுள்ள மாநிலம் புதுச்சேரி, ஆகவே சுற்றுலாவினர் விரும்புவதை புதுச்சேரி அரசு வழங்கும் என சூட்சமமாக பதில் அளித்தார்.

இதனையடுத்து புதுச்சேரியில் லாட்டரி வர உள்ளதை முதல்வர் மறைமுகமாக கூறிவிட்டதாகவும் விரைவில் கேசினோ மற்றும் லாட்டரி முறை புதுச்சேரியில் அமலாகும் என்றும் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் கேசினோ மற்றும் லாட்டரி கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் வழங்கினாலும் ஆளுநர் ஒப்புதல் வழங்கக்கூடாது எனக்கூறி, அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவில், மக்களை சீரழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.