தமிழ்நாடு

தோல் நோயுடன் தெருக்களில் திரியும் நாய்கள்... அச்சத்தில் மக்கள்..!

தோல் நோயுடன் தெருக்களில் திரியும் நாய்கள்... அச்சத்தில் மக்கள்..!

webteam

ரோமங்கள் உதிர்ந்து தோல்நோயுடன் தெருக்களில் திரியும் தெருநாய்களின் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள், ரோமங்கள் உதிர்ந்து அருவருப்பான நிலையில் சுற்றித் திரிவதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் நாய்களின் மூலம் தோல் நோய் தொற்றிக் கொள்ளுமோ என்ற அச்சத்துடன் இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஒருசில வீட்டு நாய்களுக்கும் இந்த தோல் நோய் பரவி இருக்கிறது.

நாய்களுக்கு ஏன் இந்த நோய் வருகிறது? இது எப்படி பரவுகிறது? என்பது குறித்து கால்நடை மருத்துவர் கூறும்போது “ முதலில் இது போன்ற தோல் நோய் வருவதற்கு சத்துக் குறைபாடு ஒரு முக்கியக் காரணம். நாய்களுக்கு பரவும் 6 விதமான நோய்களில் ஏதேனும் ஒரு நோய் தாக்கினாலும் இது போன்ற தோல் நோய் வரக்கூடும். நோய் தாக்கப்பட்ட நாய்களின் ரோமங்கள் உதிர்வதால், அந்த ரோமங்களின் மூலமாக மற்ற நாய்களுக்கு இந்த நோய் சுலபமாக பரவுகிறது.

பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சோதனை செய்து அவற்றிற்கு எந்த நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து, சிகிச்சையை அளித்தால் மட்டுமே இந்த நோயை குணப்படுத்த முடியும். மேலும் பாதிக்கப்பட்ட நாய்களை குறைந்தது 15 நாட்கள் தனி பராமரிப்பில் வைத்திருக்க வேண்டும்” என்று கூறினர்.

நாய்களுக்கு வரும் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முதலில் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த தெரு நாய்களுக்கும் சிகிச்சை அளித்து குணப்படுத்துவது சிரமமான காரியம். எனவே நாய்களின் இனப்பெருக்கத்தை நிறுத்தினால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.