தமிழ்நாடு

வளர்ப்பு நாயை வாயில் வெட்டிய செல்போன் திருடர்கள் கைது

வளர்ப்பு நாயை வாயில் வெட்டிய செல்போன் திருடர்கள் கைது

webteam

வளர்ப்பு நாயை தாக்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், செல்போன் பறிப்பு கும்பல் சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை போரூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான். இவர்களின் வீட்டிற்கு வந்த 3 இளைஞர்கள், அந்தச் சிறுவன் எங்கே என்று கேட்டுள்ளனர். வந்தவர்கள் போதையின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். அப்போது வெளியே வந்த சிறுவனின் பாட்டி, அவன் வீட்டில் இல்லை எனக்கூறி இருக்கிறார்.

பாட்டியின் பதிலை அலட்சியப்படுத்திய மூன்று பேரும், திடீரென வீட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைவதைக் கண்ட அந்த வீட்டின் நாய், மூன்று பேரையும் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்திருக்கிறது.

இதனால் எரிச்சலடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, குரைத்துக் கொண்டிருந்த நாய் வாயின் இரு பகுதிகளிலும் பலமாக வெட்டியுள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த அந்த நாய், மரண ஓலமிட்டு அங்கும் இங்குமாய் ஓடியது. அதைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் வருவதற்கு‌ள், அந்த 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். 

நாய் மீது தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அவர்கள் செல்போன் பறிப்பு கும்பல் என தெரியவந்தது.  துரித நடவடிக்கை மேற்கொண்ட காவலர்கள், வளர்ப்பு நாய் மீது தாக்குதல் நடத்திய வெங்கட், முத்து,‌ அருண் ஆகியோரைக் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சிறுவனுடன் கூட்டாக சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும், திருடிய செல்ஃபோன்களை பிரித்துக் கொள்வதில் பி‌ரச்னை ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஆயுதங்களை கூர்த் தீட்டிக் கொண்டு சிறுவனை தீர்த்துக்கட்டும் முடிவோடு வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட களேபரத்தில், போதையில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வெட்டிவிட்டு தப்பியதாக மூன்று பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.