போலியோ தடுப்பு மருத்துக்கான தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் பிப்ரவரி 3-ஆம் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
குழந்தைகளை போலியோ நோயிலிருந்து காப்பாற்ற 1 முதல் 5 வயதிற்குப்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் போலியோ தடுப்பு மருந்துக்கான தட்டுப்பாடு காரணமாக, இந்தாண்டு பிப்ரவரி 3-ஆம் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
மத்திய சுகாதார மற்றும் குடும்பல நல அமைச்சகம் பீகார், மத்திய பிரதேசம், மற்றம் கேரள மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு ஒரு கடிதம் சமீபத்தில் எழுதியிருந்தது. அதாவது தவிர்க்க முடியாத காரணத்தினால் போலியோ சொட்டு மருந்து முகாமை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தாண்டு மத்திய அரசின் தடுப்பு மருந்து தொழில்நுட்ப குழு இதுவரை போலியோ சொட்டு மருந்து நடத்துவதற்கு தேதி அறிவிக்காததால் பிப்ரவரி 3 ஆம் தேதி நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இதற்கு தமிழக அரசு காரணம் அல்ல என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போலியோ தடுப்பு மருத்துக்கான தட்டுப்பாடு காரணமாகத் தான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியோ தடுப்பு மருந்துக்கான தட்டுபாடுகளை விரைவில் சரிசெய்யவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே மத்திய சுகாதாரத்துறையோ, மருந்துகள் தட்டுப்பாடு என்ற புகாரை மறுத்துள்ளது. போலியோ தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பதாகவும் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.