விஜய், ராகுல்காந்தி pt web
தமிழ்நாடு

ராகுல் அறிவுரையால் கட்சி தொடங்கினாரா விஜய்? 2009-ல் நடந்தது என்ன? முழு விபரம்

இரா.செந்தில் கரிகாலன்

ராகுல் காந்தியின் அறிவுரையில் கட்சி தொடங்கிய விஜய்

“ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது” என முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக உறுப்பினருமான விஜயதரணி கருத்துத் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கட்சியின் மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் அறிமுகப்படுத்திய கொடி குறித்தே ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தவிர, விஜய் கட்சிக்கொள்கையை இன்னும் அறிவிக்கவில்லை என்பதால், ‘அவர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவரின் ஆலோசனையில்தான் செயல்பட்டு வருகிறார் என்றும் பிஜேபியின் அஜென்டாபடியே, அவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார்’ என்றும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிரணிச் செயலாளர் பொறுப்பு வகித்து, தற்போது பாஜகவில் செயல்பட்டு வரும் விஜயதரணி, “ராகுல்காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார்” என்கிற கருத்தைத் தெரிவித்துள்ளார். தவிர, “வரும் காலத்தில் அவர், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளது.., நான் காங்கிரஸில் இருந்தபோது, நடிகர் விஜய்யிடம் கட்சி தொடங்கவேண்டும் என டெல்லியில் வைத்து ராகுல் காந்தி கூறினார்” என்றும கருத்துத் தெரிவித்துள்ளார். விஜயதரணியின் இந்தக் கருத்து மிகப்பெரிய பேசுபொருளாகியிருக்கிறது. விஜயதரணியின் இந்தக் கருத்துக்கு, தவெக செய்தித் தொடர்பாளர்களின் விளக்கத்தைப் பாப்பதற்கு முன்பாக, 2009-ல் நடந்த ஒரு சம்பவம் குறித்துப் பார்ப்போம்.

Vijayadharani Vijay

2009-ம் வரும் ஆகஸ்ட் மாதம், புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அப்போது, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அரசியலில் நுழைவதற்காகத்தான் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்தீர்களா என ஒரு மாணவி கேள்வியெழுப்ப, “அரசியலில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது நேரம் இல்லை. அதற்கான காலமும் இதுவல்ல. வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன். அரசியல் ஒரு கடல். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார். இந்தக் கூட்டத்தில், ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டது, புதுச்சேரி மாநில காங்கிரஸார் மத்தியில் ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

விஜய்யின் தந்தை கொடுத்த விளக்கம்

தொடர்ந்து, அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராகுல்காந்தியிடம் இருந்து விஜய்க்கு அழைப்பு வந்தது. தமிழ்நாட்டில் விஜய்யை வைத்து காங்கிரஸை ராகுல் வலுப்படுத்த நினைப்பதாகவும் செய்திகள் வெளியாகின... தொடர்ந்து, ராகுல் காந்தியும் விஜய்யும் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார் விஜய், அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட இருக்கிறது’ என தகவல்கள் பரவின. அப்போது, விஜய்யின் தந்தை சந்திரசேகர், பத்திரிகையாளர்களிடம், “நீண்ட நாட்களாகவே விஜய்யும் ராகுலும் இ-மெயிலில் தொடர்பில் உள்ளனர். இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்வதும் வழக்கம். இப்போது நடந்தது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்” என விளக்கமளித்திருந்தார். அதற்குப் பிறகு, 15 ஆண்டுகள் கழித்து தற்போது, நேரடி அரசியலில் இறங்கியிருக்கிறார் நடிகர் விஜய்.

தவெக தலைவர் விஜய்

இந்தநிலையில், ராகுல் அறிவுரைப்படியே விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார், என முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியான விஜயதரணி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழக செய்தித் தொடர்பாளர்களிடம் பேசினோம். ஆனால், அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.