விஜய் pt web
தமிழ்நாடு

PT Exclusive | தவெக: ஒத்திகை பார்க்கப்பட்டது கட்சியின் கொடி இல்லையா? எப்படி இருக்கும் புதிய கொடி..?

நாளை வெளியாகும் தவெக கொடி என்னென்ன வண்ணங்களில் இருக்கப்போகிறது, எந்த இலச்சினை கொடியில் இடம் பெறப்போகிறது என்பதுதான் இணையத்தில் தற்போதைய விவாதம்...

இரா.செந்தில் கரிகாலன்

கொடி அறிமுக விழா

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் வீரக்கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்” என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து நாளை வெளியாகும் தவெக கொடி என்னென்ன வண்ணங்களில் இருக்கப்போகிறது, எந்த இலச்சினை கொடியில் இடம் பெறப்போகிறது என்பது இணையத்தில் தற்போதைய விவாதமாக மாறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது. இந்தநிலையில், நாளை, பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் என குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

“காலை ஆறு மணிக்குள்ளாகவே, அனைவரும் வந்துவிடவேண்டும்; யாரும் உள்ளே செல்போன் எடுத்துவரக்கூடாது” என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை, 9.15 மணி முதல் நிகழ்வு ஆரம்பமாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தநிலையில், இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ActorVijay TVKFlag

அதில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது பெரும் வரம். அப்படியான வரமாக, இயற்கையும் இறைவனும் நமக்கு அமைத்துக்கொடுத்திருக்கும் நாள்தான், 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் வீரக்கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடியின் வண்ணங்கள் என்ன?

இறுதியாக, நாளை முதல் கொடி பறக்கும், இனி தமிழ்நாடு சிறக்கும்... வெற்றி நிச்சயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில், கட்சித் தலைமையகத்தில் விஜய் கொடியேற்றி ஒத்திகை பார்ப்பதாகவும் ஒருசில புகைப்படங்கள் வெளியாகின. அதில், மஞ்சள் நிறத்தில் விஜய் உருவம் பொறித்த கொடி இருந்தது. ஆனால், நாளை அறிமுகப்படுத்தப்படும் கொடி அதுவல்ல. ஆகவே அந்தக் கொடி எப்படி அமைந்திருக்கும்.. கட்சி வட்டாரத்தில் பேசினோம்.

“மஞ்சள், சிகப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறத்தில் கொடி இருக்கும். பிறப்பால் எந்த ஏற்றுத்தாழ்வுகளும் இருக்கக்கூடாது.

நாம் அனைவரும் ரத்தத்தால் ஒன்றுபட்டவர்கள் என சமத்துவத்தைக் குறிக்கும் வகையிலேயே சிகப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல, வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளது.

அன்பை, அமைதியை சமாதானத்தை போதிக்கும் வகையில் வெள்ளை நிறம் இடம் பெற்றுள்ளது.

வெற்றியின் குறியீடாக வாகை மலர் நடுவில் இடம்பெற இருக்கிறது” என்கிறார்கள்.

அதேவேளை “மஞ்சள், சிகப்பு நிறத்தில், வாகை மலரோடு கொடி இருக்கும்... வெள்ளை நிறம் இருக்காது” எனவும் ஒரு தரப்பு கூறுகிறது. தவிர, கொடிப்பாடல், இசையமைப்பாளர் தமனின் இசையில், பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உருவாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.