தமிழக வெற்றிக் கழகமும் V சென்ட்டிமென்ட்டும் புதிய தலைமுறை
தமிழ்நாடு

V சென்டிமென்ட்டில் மூழ்கிய தமிழக வெற்றிக் கழகம்? சுவாரஸ்ய குறியீடுகள்...!

தமிழக வெற்றிக் கழகத்தினர், 'V' என்ற ஆங்கில எழுத்தை சென்ட்டிமென்ட்டாக பின்பற்றி வருவது, சில சுவாரஸ்யமான குறியீடுகள் மூலம் தெரியவருகிறது.

PT WEB

செய்தியாளர்: ஸ்ரீதர்

நடிகராக ரசிகர்களைக் கவர்ந்த விஜய், இளைய தளபதியாக இருந்து தளபதியாக உயர்ந்தார். இப்போது திரைத்துறைக்கு விடை கொடுக்க முடிவு செய்துள்ள விஜய், அரசியலில் தடம் பதிக்க புறப்பட்டுள்ளார். 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ளார். தங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகாரம் கிடைத்திருப்பதாக, தமிழக வெற்றிக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் - விஜய்

கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளின் முனைப்பாக இருக்கின்றனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தினர், 'V' என்று தொடங்கும் பெயர்களுடன் தொடர்ந்து பயணித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

கட்சித் தலைவரின் பெயரான விஜய் என்பதே, 'V' என்ற எழுத்தில் தொடங்குகிறது. வெற்றி என்பதன் ஆங்கில வார்த்தையான VICTORY-யும் 'V' என்ற எழுத்தில் தொடங்குகிறது. இதன் நீட்சியாகத்தான், கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் இடம், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, வி. சாலை என ஒவ்வொன்றுமே 'V' என்று தொடங்கும் பெயர்களாக உள்ளன.

'V' என்று தொடங்கும் தொகுதியில் மாநாடு நடத்தினால், வெற்றி மேல் வெற்றி பெறலாம் என ஜோதிடர்கள் கூறியதே இதற்கு காரணம் என்பதாக சில தகவல்கள் கூறுகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தினரை சார்ந்து, 'V' என்ற ஆங்கில எழுத்தின் பின்னணியில் அணிவகுக்கும் சுவாரஸ்யங்கள் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த்திடமே கேட்டோம். அதற்கு, மழுப்பலாக பேசி தவிர்க்க முயன்ற ஆனந்த், பின்னர் ஜோதிட நம்பிக்கை என்பதை மறுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரிதும் மதித்துப் போற்றும், விஜயகாந்த், தேமுதிகவைத் தொடங்கியபோது, முதல்முதலில் போட்டியிட்டதே, 'V' என தொடங்கும் விருத்தாசலத்தில்தான் என்று, அரசியல் விமர்சகர்கள் நினைவுகூர்ந்து சுட்டிக்காட்டுகின்றனர். பொதுவாக அரசில் கட்சியினர், ஜோதிடர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவார்கள் என்பது உண்மைதான் என்பது விமர்சகர்களின் கருத்து.