கல் குவாரி pt desk
தமிழ்நாடு

கோவை: விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகள்? கனிம வளங்கள் அதிக அளவில் சுரண்டப்படுகிறதா?

கோவையில் கல்குவாரிகளுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியிருப்பது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம் ஆகியுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

PT WEB

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி இயற்கையிலேயே அதிக கனிம வளங்கள் கொண்ட ஒரு பகுதியாகும். சமீபத்தில் சில ஆண்டுகளாக இங்குள்ள கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்கள் எடுக்கப்படுவதாகவும், விவசாய நிலங்களை குவாரிகளாக மாற்றிவருவதாகவும் அந்தப் பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதனையடுத்து புதிய தலைமுறை அங்கு நேரடி கள ஆய்வு மேற்கொண்டது.

இந்தக் கள ஆய்வில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, கல்குவாரியைப் பயன்படுத்த கேரளாவைச் சேர்ந்த நபருக்கு அனுமதி வழங்கப்பட்டதும், லாரிகளில் கனிமவளங்கள் எவ்வளவு ஏற்றிச் செல்லப்படுகின்றன என்பது குறித்த பதிவேடு எதுவுமில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், பல்வேறு நிபந்தனைகளை மீறியே கல்குவாரி நடத்தப்படுகிறது என்றும் கூறுகிறார் அப்பகுதி விவசாயி சுந்தரம்.

கேரளாவில் இது குறித்த நிபந்தனைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் நிலையில், தமிழகத்தில் குவாரி உரிமையாளர்களுக்குத்தான் அரசு ஆதரவாக இருக்கிறது என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. கல்குவாரிகளுக்காகச் சூறையாடப்பட்டுவரும் விவசாய நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.