ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், விலை உயர்ந்த புடவைகள் சால்வைகள் கைக்கடிகாரங்கள் காலனி என 27 அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. பல கோடி மதிப்பில் ஆன இந்த பொருட்களை கருவூலத்தில் வைத்திருப்பதால் அது சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கு முடிந்து தண்டனைக் காலமும் நிறைவடைந்து விட்டதால் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும் என்றும் கர்நாடகாவை சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில், “பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் தங்க, வெள்ளி, வைர நகைகள் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து ஆவணங்களை தவிர்த்து பிற பொருட்களை மதிப்பை மட்டும் கணக்கேற்றிவிட்டு அதை பரிந்துரைக்கப்பட்ட நபரிடம் கொடுத்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கூட்டு சதியின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் லஞ்ச ஒழிப்புத் துறை இடமும் அல்லது நீதிமன்ற கருவூலத்திலோ வைக்கப்படும் என்பதுதான் வழக்கம். ஆனால் இந்த வழக்கில் பரிந்துரைக்கப்பட்ட நபரிடம் பொருட்களை ஒப்படைத்து இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அந்த பொருட்கள் யார் வசம் உள்ளன, அதை எப்படி யாரிடம் இருந்து பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கேள்விகளாக எழுந்துள்ளன.
இந்த அடிப்படையில், ஜெயலலிதாவின் வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தையும் கர்நாடக நீதிமன்றம் வசம் ஒப்படைத்து அதை முறைப்படி ஏலம் விட வேண்டும் என நரசிம்ம மூர்த்தி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ஜெயலலிதா பரிந்துரைக்கப்பட்ட நபர் வாரிசு என்று கூறி தீபா மற்றும் தீபக் இந்த சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஜெயலலிதாவின் இந்த சொத்து, சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளதால் அதை ஒப்படைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது நீதிமன்றம். அதன்பின்னரே நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் புடவைகள் காலணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொருட்கள் யார் வசம் உள்ளது என கேட்டு விண்ணப்பித்திருந்தார்.