செய்தியாளர் - மணிகண்டபிரபு
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலெட்சுமி. இவரது கணவர் ராஜ்குமார் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் மைதிலி ராஜலெட்சுமி தனது 14 வயது மகனுடன் மதுரை வேல்முருகன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 11ம் தேதி காலை வழக்கம் போல பள்ளிக்கு மைதிலி ராஜலெட்சுமி மகன் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஆம்னி கார் மூலமாக பின்தொடர்ந்து சென்ற கும்பல் ஒன்று ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியை தாக்கியதோடு மாணவனையும், ஆட்டோ ஓட்டுநரையும் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி கடத்தி ஆம்னியில் ஏற்றிக் கடத்தினர்.
இதனையடுத்து நாகமலைபுதுக்கோட்டை அருகே கடத்தல் கும்பல் மது அருந்தியபடி ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை எடுத்து மாணவனின் தாயாருக்கு வீடியோ கால் செய்து மாணவனையும் ஆட்டோ ஓட்டுனரின் காயத்தையும் காட்டி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என தாய் மைதிலி கூறியதால், சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்து “2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும். பணத்தை துவரிமான் ரவுண்டானாவிற்கு எடுத்து வர வேண்டும். இல்லையெனில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டியது போல் உன் மகனையும் வெட்டி வீசி விடுவேன். யாரிடமும் சொல்லக்கூடாது போலீஸூக்கு போனாலும் கொன்னுடுவேன்” என மிரட்டிப் பேசினர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட ஆடியோவுடன் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் தாயார் மைதிலி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சிறுவனை கடத்தி மிரட்டிய கடத்தல் கும்பலை விரட்டிச்சென்றனர்.
காவல்துறையினர் தங்களைக் கண்டுபிடித்து பின்தொடர்வதை பார்த்த கடத்தல் கும்பல் 7ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றது. இதனையடுத்து அக்கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தெற்கு காவல் துணை ஆணையர் தலைமையில் 3க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
மைதிலி ராஜலெட்சுமி, ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி மற்றும் பள்ளி மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அக்கும்பல் அடையாளப்படுத்தப்பட்டு 12ம் தேதியே போடி செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சிவகிரி பகுதியில் காவலராக இருந்த செந்தில்குமார் காவல்துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார். அதன்பின் குற்றவாளிகளுடன் இணைந்து கொலை கொள்ளை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
செந்தில்குமாரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் சிலரை காவல்துறையினர் அன்றே கைது செய்தனர். அதன்படி நெல்லை ரஹ்மான் பேட்டையை சேர்ந்த அப்துல்காதர், தென்காசி சிவகிரி பகுதியில் உள்ள வீரமணி, காளிராஜ் ஆகிய மூவரை 12ம் தேதி மாலை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதான மூவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டதின் பேரில், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கடத்தல் சம்பவத்தில் குஜராத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் என்பவரின் மனைவி சூர்யா மற்றும் பிரபல ரவுடி ஐகோட் மகாராஜா என்பவருக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிய வந்தது.
சூர்யா அவருடைய தாய் மீனா மற்றும் பாட்டி பத்மாவதி தங்கியிருந்த ஜெய்ஹிந்த்புரம் வீட்டில் கடந்த பல மாதங்களாக தங்கியிருந்ததாகவும், அப்போது சூர்யாவுக்கும் அவரது ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் மைதிலி ராஜலெட்சுமி - சூர்யா ஆகியோருக்கு இடையே அழகுநிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் விற்பனை மற்றும் இடத்தை வாங்கி விற்பது உள்ளிட்டவற்றில் தொழில்ரீதியான நட்பு இருந்ததும், இதில் பணம் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மைதிலி ராஜலெட்சுமிக்கு லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை சூர்யா கொடுக்க வேண்டிய நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் மைதிலி ராஜலெட்சுமி மகனை பிரபல ரவுடி மகாராஜா உதவியுடன் கூலிப்படை கும்பலை வைத்து சூர்யா கடத்தியதாகவும் சொல்லப்பட்டது.
இதனையடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் என்பவரின் முன்னாள் மனைவி (சூர்யா), பிரபல ரவுடி (ஐகோட் மகாராஜா) ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இருவரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை பிடிக்க விரைந்ததாகவும் சொல்லப்பட்டது. ஊடகங்களிலும் பரவலாக செய்திகள் பரவிய நிலையில் நேற்று (21-07-2024) குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் வீட்டில் அவருடைய மனைவி சூர்யா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சூர்யாவின் தாய் மற்றும் பாட்டி இதுபற்றி கூறுகையில், “பள்ளி மாணவனின் தாய் மைதிலி ராஜலெட்சுமி, கிஷோர் என்பவரோடு சேர்ந்து எனது மகள் சூர்யாவை ஏமாற்றி பணம் மற்றும் பீயூட்டி பார்லரை கைப்பற்றி தற்போது பொய்யான புகாரை கொடுத்து சூர்யாவை தற்கொலை செய்ய வைத்துவிட்டனர். இதுகுறித்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாங்கள் நேற்று புகார் கொடுக்க வந்திருந்த நிலையில், குஜராத்தில் சூர்யா அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துவிட்டார். மைதிலி ராஜலெட்சுமி மற்றும் அவருடைய உதவியாளர் கிஷோர் ஆகியோர்தான் என் மகள் இறப்பிற்கு காரணம்” என்றனர். இதுதொடர்பாக அவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்தனர்.
தொடர்ந்து தனது மகள் இறப்பு குறித்தும் எஸ்எஸ் காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார் சூர்யாவின் தாய். காவல்துறை தரப்பில், “இந்த வழக்கில் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது காவல்துறையின் விசாரணையில்தான் தெரியவரும். தலைமறைவாக உள்ள ரவுடி ஐகோட் மகாராஜாவை பிடித்தால் மட்டுமே இந்த கடத்தல் சம்பவத்தின் முழு பின்னணி தெரிய வரும்” என கூறுகின்றனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறையிடம் கேட்ட போது, “தற்போது கடத்தல் தொடர்பான வழக்கு முழு புலனாய்வில் உள்ளது. விரைவில் மகாராஜா கைது செய்யப்படுவார்” என தெரிவித்தனர். பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.