அதிமுக-வில் பிளவா? புதிய தலைமுறை
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவா? அமைச்சர் ரகுபதி பற்ற வைத்த நெருப்பு... எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை?

இரா.செந்தில் கரிகாலன்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் “ஏற்கெனவே ஜெயக்குமார்கூட, 'எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அதற்கு செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும்' என சொன்னதாக செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால், அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம். பாஜக செய்யும்” என பற்றவைத்த நெருப்பு, கடந்த இரண்டு நாள்களாக தமிழக அரசியல் களத்தில் தீயாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.

minister raghupathy eps

அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு அதிமுகவிலிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவரணி அமைப்பாளர் முத்துக்கருப்பன் ஏற்பாடு செய்திருந்த, கோடைகால நீர்மோர் தண்ணீர் பந்தலை கடந்த 12-ம் தேதி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற வேண்டும். அப்போதுதான் சரியான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும். அதை விட்டுவிட்டு வேறு விதமாக விமர்சனங்களில் அவர் இறங்குகின்ற போது அவரது பதவிக்கு ஆபத்து வந்துவிடும்’’ எனக் கூறியதோடு மேலே குறிப்பிட்ட விஷயங்களையும் பேசியிருந்தார்.

இத்துடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி கட்சியை பிளவுபடுத்தப் போகிறார்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்து அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது.
sp velumani

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும். ஆனால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கும் கருத்து கண்டிக்க கூடியது.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முன் சிந்தித்து செயல்படுவதுதான் அவரை போன்ற அரசியல்வாதிக்கு ஏதுவாக அமையும். என்னைப் பொறுத்தவரை மாற்றுக்கட்சியினர் குறைசொல்ல முடியாத அளவுக்கு 45 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தில் நேர் வழியில் சென்றுள்ளேன். அதிமுகவுக்கு என்றைக்கு சோதனை வந்தாலும் தூணாக நின்று செயல்பட்டுள்ளேன்" என்று விளக்கம் தந்திருந்தார்.

அவர் மட்டுமல்லாது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது... ``2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார். இதை பொறுக்க முடியாமல் இதை எதிர்கொள்ள முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளி பேசி வருகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறி வரும் பைத்தியக்காரர்கள் போல பேசி வருகின்றனர்’’

மேலும் “அ.தி.மு.க.வில் இருந்த பொழுது அ.தி.மு.க.வின் பாலை குடித்துவிட்டு, தற்போது தி.மு.க.வுக்கு சென்றவுடன் அங்கு அ.தி.மு.க.விற்கு எதிராக விஷப்பாலை கக்குவது மிகப்பெரும் பாவச்செயலாகும். அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை’’ எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் வீட்டில் முன்னணித் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாது, ‘திமுகதான் திட்டமிட்டு இதுபோன்ற விஷயங்களைப் பரப்புகிறது. எங்கள் கட்சியில் அப்படி எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை’ என்பதே அதிமுக வட்டாரத்தில் இருந்து வரும் தகவலாக இருக்கிறது.