பா.ஜ.க மற்றும் புதிய தமிழகம் கட்சியினரிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக ’கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் தேதி புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அளித்திருந்த பேட்டியில், கக்கூஸ் ஆவணப்படத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மலம் அள்ளுவது போல அமைக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என்று திவ்யபாரதி மீது வழக்கு தொடர்ந்தார். இதை சந்திக்கத் தயார் என்று திவ்யபாரதி கூறியிருந்தார். இதையடுத்து புதிய தமிழகம் நிர்வாகிகள், திவ்யபாரதியை செல்போனில் ஆபாசமாக பேசுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் திவ்யபாரதி ஏற்கனவே புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திவ்யபாரதி, ‘10 நிமிடத்துக்கு ஒரு முறை என்று எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. மிரட்டல் விடுத்தவர்களை தொடர்பு கொண்டால் தாங்கள் பாஜக பிரதிநிதி என்றே கூறுகின்றனர். எனக்கு வரும் மிரட்டல்களில் 100க்கு 40 சதவீதம் நெட் காலிங், வளைகுடா நாடுகள், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அருவறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசுகின்றனர். வழக்கு ஒன்றிற்காக மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த போது என்னைப் பின் தொடர்ந்து சிலர் வருகின்றனர். என்னை கொலை செய்ய, ரூ. 2 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.