தமிழ்நாடு

முதல்வரிடம் சொன்ன ஆலோசனைகள் என்னென்ன? - மருத்துவர்கள் குழு பேட்டி

webteam

கொரோனா பாசிட்டிவ் அதிகமாகிறது என்பதில் கவனம் செலுத்தாமல், இறப்பு விகிதத்தை குறைப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு மருத்துவர்கள் குழு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது. அப்போது பேசிய அவர்கள், “கடந்த ஆலோசனையில் பரிசோதனையை அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். அவை பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் கிட்டதட்ட 10 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் பரிசோதனை நடத்தப்படுகிறது. கடைசி 2 வாரத்தில் மற்ற மாவட்டங்களிலும் எண்ணிக்கை கூடி வருகிறது. அதனால் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளான திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளோம்.


பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பரிந்துரைக்கவில்லை. ஏனென்றால் பொதுமுடக்கத்திலேயே நாம் எப்போதும் இருக்க முடியாது. அதனால் மற்ற யுக்திகளை கடைபிடிக்க வேண்டும். பொது போக்குவரத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தால் கூட காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். சுவை, மணம் தெரியாவிட்டால் அவரகள் காய்ச்சல் மையத்தில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதமானல் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி. பொதுமுடக்கம் என்பது ஒரு பெரிய கோடாரியை எடுத்து கொசுவை கொல்வது போன்றது. பொதுமுடக்கத்தால் பயன் கிடைத்துள்ளது. ஆனால் வேறு வழிகளையும் பார்க்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். பொதுமுடக்கம் அல்லாமல் வேறு என்ன வழிகளை பின்பற்றலாம் என முதலமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளோம். மேலும், நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் நவீன சிகிச்சைகள் உடனடியாக அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். முதலமைச்சரும் அதற்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாசிட்டிவ் அதிகமாவதை கண்டு பயப்படாமல் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். இறப்பு விகிதம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. தேவையான உபகரணங்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் உயர்ரக மருந்துகள் வந்துள்ளது. எல்லா மருத்துவமனையிலும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முறைக்கூட ஒரே மாதிரி எல்லா மருத்துவமனைகளிலும் செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.