விபத்தில் கை துண்டான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏழு மணிநேர அறுவைசிகிச்சை மூலம் கை பொருத்தப்பட்டது.
சேலம் கந்தம்பட்டி புறவழிச் சாலை அருகே கடந்த 8-ஆம் தேதி லாரி டயருக்கு காற்றடிக்கும் கம்ப்ரஸர் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் வரை பறந்து சென்ற சிலிண்டரின் மேற்பாகம், வீடு ஒன்றின் மேற்கூரையை சிதைத்து உள்ளே விழுந்தது. இந்த விபத்தில் பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்த மௌலீஸ்வரன் என்ற 11 வயது சிறுவனுக்கு கை துண்டானது. இதுமட்டுமின்றி கால் தொடை பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே துண்டான கை பகுதியை மௌலீஸ்வரனின் பெற்றோர் காலதாமதமின்றி பாதுகாப்பாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். தயார் நிலையில் இருந்த சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் உடனடியாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
சுமார் 7 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் கை பொருத்தப்பட்டது. தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மௌலீஸ்வரன் கை ஓரிரண்டு மாதங்களில் இயல்பு நிலைக்கு வரும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
பெற்றோர் உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்ட காரணத்தினாலேயே இந்த அறுவை சிகிச்சை 100% வெற்றி பெற்றதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக சிறந்த சிகிச்சை வழங்கி தங்கள் பிள்ளைக்கு மறுவாழ்வு அளித்த மருத்துவ குழுவினருக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.