தமிழ்நாடு

மருத்துவரின் அலட்சியமே குழந்தை மூளைசாவு அடைய காரணம் - உறவினர்கள் குற்றச்சாட்டு

மருத்துவரின் அலட்சியமே குழந்தை மூளைசாவு அடைய காரணம் - உறவினர்கள் குற்றச்சாட்டு

webteam

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்தாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (27) இவரது மனைவி வினோதினி (23) இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், வினோதினி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் பரிசோதனை செய்தபோது வினோதினியின் கால்களில் லேசான வீக்கம் இருந்ததாகக் கூறி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அங்கு வினோதினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை வினோதினி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதே குழந்தையின் துடிப்பு இல்லாதது போல் உள்ளதாக பணியில் இருந்த பெண் வினோதினி மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு குழந்தை நலமாக உள்ளதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பதற்காக வினோதினியை அழைத்துச் சென்ற நிலையில், மாலை 4.30 மணிக்கு குழந்தை நாடித் துடிப்பு இல்லாமல் பிறந்துள்ளது எனக்கூறி தீவிர சிகிச்சை பிரிவிற்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குழந்தை உடலின் நிறம் மாறிவிட்டதாகவும், குழந்தை மூளை சாவு அடைந்ததாக கூறிய மருத்துவர்கள், காலைக்குள் குழந்தை உயிரிழக்கலாம் எனவும்; தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் தெரிவித்த போது, பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் காலையிலேயே குழந்தையின் துடிப்பு இல்லாதது போல் உள்ளது என தெரிவித்த போதே அலட்சியம் இல்லாமல் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் அலட்சியமான சிகிச்சையின் காரணமாகவே குழந்தை மூளை சாவு அடைந்தது என குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.