தமிழ்நாடு

”அரசின் ஆன்-லைன் நீட் பயிற்சி மூலம் மருத்துவர் கனவு நனவானது” - கூலி தொழிலாளியின் மகள்

”அரசின் ஆன்-லைன் நீட் பயிற்சி மூலம் மருத்துவர் கனவு நனவானது” - கூலி தொழிலாளியின் மகள்

kaleelrahman

தமிழக அரசின் ஆன் லைன் நீட் பயிற்சியின் மூலம் மருத்துவர் கனவு நனவாகியுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட மாணவி அனுஷா தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி - பார்வதி தம்பதியரின் மூத்த மகள் அனுஷா. இவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான அனுமதி கிடைத்துள்ளது.

கூலி வேலை செய்யும் தாய், தந்தை இருவரும் அனுஷாவை பெரும்பேடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 102 வரை படிக்க வைத்துள்ளனர். மருத்துவ உதவிக்கு கூட 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையில், தற்போது தாம் மருத்துவ மாணவியாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்றார் அனுஷா.

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் மாணவியான அனுஷா, குக்கிராமத்தில் இருந்தாலும் மருத்துவராக வேண்டும் என்ற கனவு துளிர் விட அதனை பள்ளியின் தலைமையாசிரியை மைதிலி கண்டறிந்து அதற்கான முயற்சியில் இறங்கியதாகவும் கூறினார். அரசின் நீட் பயிற்சியில் இணைந்து ஆன் லைன் மூலம் பயிற்சி பெற்றதின் விளைவு இன்று மருத்துவக் கனவு நனவாகியுள்ளதாக கூறினார்.

இந்த மாணவி.நீட் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்த உடன் மருத்துவரானதாகவே நினைத்ததாகவும், கலந்தாய்வில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியே எனவும் கூறும் அனுஷா, பொது பிரிவில் 259-வது இடத்திலும், நீட் ஸ்கோர் 273-ஆக வந்தது மகிழ்ச்சி எனவும் கூறினார்.

படித்த பள்ளியிலும், கிராமத்திலும், தமது குடும்பத்திலும் தாமே முதல் மருத்துவர் என பெருமிதம் கொள்ளும் அனுஷா, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். மருத்துவராகி கிராமத்தில் பணி செய்ய வேண்டும் என கூறும் இவர், நகரத்தில் மருத்துவ வசதி உண்டு, ஆனால் இன்னும் கூட மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில் பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இது மட்டுமின்றி, நீர் தேர்வை கண்டு பயப்பட வேண்டாம் எனவும் விருப்பம் இருந்தால் சாதிக்கலாம் எனவும், கஷ்டமாக நினைக்காமல், நன்றாக படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்றார். இவர்.7.5 ரிசர்வேஷனில் ஏழை மாணவியான தமக்கு பேருதவியாக இருந்ததாகவும், லட்ச கணக்கில் பணம் கட்டி படிக்கும் பணக்காரர்கள் மத்தியில் எட்டாக்கனியாக இருந்த மருத்துவக் கனவு, அரசின் நீட் பயிற்சியால் நனவானதாக கூறினார்.

கூலி வேலை செய்யும் தமக்கும், தமது கணவருக்கும் எதுவும் தெரியாது. மகளை படிக்க வைப்பது மட்டுமே குறிக்கோள் எனவும், மகளின் விருப்பமே தங்களது விருப்பம் என கூறினார் அனுஷாவின் தாய் பார்வதி. படித்த பள்ளிக்கு மட்டுமல்ல, பெரும்பேடு குப்பம் கிராமத்திற்கு மட்டுமல்ல, திருவள்ளூர் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் மருத்துவ மாணவி அனுஷா.