தமிழ்நாடு

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

Rasus

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒருமணி நேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதேபோல், தனியார் மருத்துவர்களும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய மருத்துவ கவுன்சில் மாநில தலைவர் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள மருத்துவக் கவுன்சிலில் மருத்துவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளதாகவும், புதிய மசோதாவின்படி கவுன்சிலின் நிர்வாகத்தில் அரசு நியமிக்கும் நபர்கள் இருப்பார்கள் என அறிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ ஆணைய மசோதா முடிவை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.