தமிழ்நாடு

5 மாத போராட்டம்; 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் உயிர் காத்த மருத்துவர்கள்!

5 மாத போராட்டம்; 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் உயிர் காத்த மருத்துவர்கள்!

webteam

நாகையில் 500 கிராம் எடையுடன் பிறந்‌த குழந்தையை 5 மாதங்களாக இன்குபேட்டரில் வைத்து வளர்த்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் சாமந்தப்பேட்டையைச் சேர்ந்த செல்வமணி - லதா தம்பதிக்கு நாகை அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையின் எடை 580 கிராம் இருந்ததால், சிசுவை உயிருடன் காப்பாற்ற முடியுமா என்ற பெற்றோர் கவலையில் ஆழ்ந்தனர். இதையடுத்து நாகை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தை சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தையை மருத்துவர்கள் இன்குபேட்டர் மற்றும் செயற்கை சுவாச கருவி செலுத்தி 24 மணி நேரமும் கண்காணித்து பராமரித்து வந்தனர். 

(கோப்புப்படம்)

கடந்த 5 மாதங்களாக செயற்கை சுவாச உதவியுடன் வளர்ந்த பச்சிளம் குழந்தை, தற்போது 2 கிலோ எடையை எட்டி, நல்ல முறையில் சுவாசிக்கவும் செய்கிறது. இதையடுத்து, குழந்தையை மருத்துவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தைக்கு ஜான்சிராணி எனப்பெயரும் சூட்டப்பட்டது. 

இதுகுறித்து பேசிய குழந்தையின் தாய் லதா, என் குழந்தைக்கு உயிர் தந்து சாதனை படைத்த மருத்துவர்களை மறக்கமாட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 

580 கிராம் குறைவான எடையில் பிறந்த குழந்தையை 5 மாதம் பாதுகாத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இது மருத்துவர்களின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.