தமிழ்நாடு

வரதட்சணை தராததால் திருமணத்தை நிறுத்திய உதவி ஆணையர் - போலீசில் புகார்

வரதட்சணை தராததால் திருமணத்தை நிறுத்திய உதவி ஆணையர் - போலீசில் புகார்

jagadeesh

வரதட்சணையை முன்கூட்டியே கொடுக்காததால் திருமணத்தை நிறுத்திய வருமானவரித்துறை உதவி கமிஷனர் மீது மணமகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மேற்கு அண்ணா நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் "தாம்பரம் அடுத்த மறைமலை நகரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற டிஎஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மகன் பாலமுரளிதரன். இவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக வேலை செய்து வருகிறார். அவருக்கும், தனக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் 29 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண பத்திரிகைகள் அடிக்கப்பட்டு திருமண மண்டபத்திற்கு வாடகையும் கொடுக்கப்பட்டு உள்ளது."  

"திருமணத்திற்கு வரதட்சணையாக ரூ.50 லட்சம் கொடுப்பதாக தெரிவித்திருந்தோம். ஆனால்  அந்த தொகையை திருமணத்திற்கு முன்பே தரவேண்டும் என்றும் மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள வீட்டை அவர்களின் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினர். திருமணம் முடிந்த பிறகு தருவதாக கூறியும் அதனை முன் கூட்டியே கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். மணமகனுக்கு கார் வாங்க கொடுத்த பணத்தில் காரும் வாங்கி உள்ளனர். தனக்கு திருமணத்திற்கு புடவை எடுப்பதாக அழைத்துச்சென்று புடவை எடுத்ததனர். அதற்கான தொகை ரூ.1 லட்சத்தை நாங்கள் தான் கொடுத்தோம். 

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே வரதட்சணை தொகை கொடுத்த பிறகுதான் திருமணம் நடைபெறும்  என்று ஏற்பாடுகளை நிறுத்தி விட்டனர்.  இதனால் எங்களுக்கு ரூ.50 லட்சம் வரை பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய ஓய்வுப் பெற்ற போலீஸ் டிஎஸ்பி பாலசுப்ரமணியன், அவரது மகன் பாலமுரளிதரன், தாயார் மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என்று திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ய அழைத்தபோது பாலமுரளிதரன் மற்றும் பெற்றோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.