எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு சுற்று பயணத்திற்காக மட்டும் ரூ. 1.25 கோடி செலவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஆகஸ்டு மாதம் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழகம் முழுவதும் சுமார் 60 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 13 லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது மூத்த சகோதரர் அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா, எஸ்.பி.வேலுமணியின் தொழில் பங்குதாரர்களான சந்திர சேகர், சந்திர பிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி உள்ளிட்ட 13 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்கை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக எஸ்.பி.வேலுமணி தான் அமைச்சராக இருந்த 2016-2021 ஆண்டு காலக்கட்டத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக தனது பெயரிலும், குடும்பத்தார் பெயரிலும் 58.23 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாகவும் அதாவது தனது வருமானத்துக்கு அதிகமாக 3928 சதவிகிதம் சொத்துகளை குவித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவையில் 41 இடங்கள், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூரில் 2 இடங்கள், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 1 இடம் மற்றும் கேரளா மாநிலத்தில் 1 இடம் என மொத்தம் 58 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவரது சகோதரர் மற்றும் பங்குதாரர்கள் நிறுவனங்களான மகா கணபதி ஜுவல்லர்ஸ், செந்தில் அன்கோ உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனது குடும்பத்தினர் மற்றும் உறவினரை பினாமிகளாக வைத்து தான் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் எஸ்.பிவேலுமணி தனது உறவினர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கென சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு டெண்டர்களை பெற்றுக் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை, ஹைதராபாத் பகுதிகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து லோன் பெற்று அதைத் திருப்பி செலுத்தாமல் காரணம் காட்டியும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேபோல தனது உறவினர்கள் மற்றும் பங்குதாரர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வருமானத்தை மறைத்துக் காட்டியும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் எஸ்.பி.வேலுமணி அவரது குடும்பத்தினருடன் 1.25 ரூபாய் செலவில் ஹாங்காங், மலேசியா உட்பட பல வெளிநாடு சுற்றுலா பயணத்திற்காக செலவழித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.