தமிழ்நாடு

இப்படியெல்லாமா மோசடி செய்வீங்க! - நீதிமன்ற வளாகத்தில் பின்காப் மோசடி நபர் மீது தாக்குதல்

இப்படியெல்லாமா மோசடி செய்வீங்க! - நீதிமன்ற வளாகத்தில் பின்காப் மோசடி நபர் மீது தாக்குதல்

kaleelrahman

திருச்சியில் கவர்ச்சிகரமான சலுகை திட்டங்களை அறிவித்து சுமார் 250 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மதுரை நீதிமன்ற வளாகத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் - பாரதி தம்பதியினர். இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செந்தூர் பின் கார்ப் என்ற பெயரில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் பணம் முதலீட்டு கம்பெனியை நடத்தி வந்துள்ளார்.

இவர்களிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் தினந்தோறும் முதலீடு செய்பவர்களின் வங்கி கணக்கிற்கு 900 ரூபாய் பணம் வழங்குவதாகவும் பின்னர் 12 மாதங்கள் கழித்து முதலீடு தொகையுடன் 40 சதவீத ஊக்கத்தொகை சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதேபோல் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு 4 சவரன் தங்க நகை, 1 கோடி முதலீடு செய்பவர்களுக்கு கார் பரிசு என பல்வேறு விதமான கவர்ச்சிகாரமான அறிவிப்பை கண்டு கவர்ந்து போன தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரசையால் சுமார் 250 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

ஒருசில மாதங்கள் மட்டும் அவர் கூறியது போல் தினந்தோறும் பணம் கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து பணம் வங்கிக் கணக்கிற்கு வராத நிலையில், அதிர்ச்சியடைந்த பயனாளிகள் அவரை அலுவலகத்தில் நேரில் பார்க்க சென்றனர். அப்போது பணத்தை சுருட்டி கொண்டு அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக முத்துராமலிங்கம், அவரது மனைவி பாரதி உள்ளிட்ட 16 பேர் மீது கடந்த 2019ல் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நாகர்கோவிலில் இருந்த தம்பதியினரை பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்த நிலையில், மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கைது செய்யப்பட்ட சில மாதத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர், ஏற்கெனவே அமைத்த செந்தூர் பின் கார்ப் முடங்கியுள்ளதால் நெல்லையில் மை மார்ட் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை அமைத்து அதில் மீண்டும் பணம் முதலீடு செய்தால் ஏற்கெனவே கட்டிய தொகையையும் சேர்த்தத் தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களும் அவர்களுக்கு தெரிந்த புதிய நபர்கள் மூலமாக மீண்டும் 15 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்த முத்துராமலிங்கத்தை சுற்றிவளைத்த பாதிக்கப்பட்டோர் சரமாரியாக தாக்கினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் மோசடி செய்ததற்கான புதிய புகாரை பெற்றுக்கொண்டு மோசடி செய்த பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுத்தியளித்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் களைந்து சென்றனர்.

கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு வழக்கு விசாரணையில் இருந்து கொண்டே மீண்டும் தைரியமாக பண மோசடியில் ஈடுபடும் இவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.